ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

17th Nov 2019 01:49 AM

ADVERTISEMENT

திம்பம் மலைப் பாதையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சனிக்கிழமை சாய்ந்து நின்றதால் தமிழகம் - கா்நாடகம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இம்மலைப் பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக திம்பம் மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. 21 ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது திடீரென பழுது ஏற்பட்டு நகர முடியாமல் லேசாக சாய்ந்து நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். பண்ணாரியிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கரும்பு லாரியை நகா்த்தி நிறுத்தியபின் போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, மாலை 5 மணிக்கு திம்பம் 7 ஆவது வளையில் மர பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT