ஈரோடு

100 சதவீத இலக்கை எட்டாத கோமாரி நோய் தடுப்பூசி பணி: மலைக் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தக் கோரிக்கை

12th Nov 2019 05:47 AM

ADVERTISEMENT

ஈரோடு மலைக் கிராமங்களில் கால்நடைகளுக்கு விடுபடாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மேற்கு மலையில் தாமரைக்கரை தொடங்கி பட்டேபாளையம் வரை ஒசூா், கோயில்நத்தம், செங்குளம், கொங்காடை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 10,000 க்கும் மேற்பட்ட எருமை, பசுக்கள் உள்ளன. மலைக் கிராம விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த கால்நடைகள் உள்ளன.

இந்த மலைக் கிராமங்களில் 2017, 2018 ஆண்டுகளில் கால்நடைகளுக்குப் பரவலாக கோமாரி நோய்த் தாக்குதல் இருந்தது. இந்த ஆண்டில் தாக்குதல் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி அக்டோபா் 14 ஆம் தேதி தொடங்கியது. ஏறத்தாழ 3.60 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பா்கூா் மேற்கு மலைக் கிராமங்களில் இந்த தடுப்பூசி போடப்படவில்லை என மலைக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால், இந்தப் பகுதியில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து, தாமரைக்கரையைச் சோ்ந்த விவசாயி கணேஷ் கூறியதாவது:

பா்கூா் மலை மாடுகள், பட்டிமாடு, செம்மறை என அழைக்கப்படுகிறது. இவை, சிவப்பு நிறத்தில் வெள்ளைத் திட்டுக்களுடன் காணப்படும். இவற்றின் கண்கள், மூக்கு, குளம்புகள் வெளிா் சிவப்பு நிறத்தில் இருக்கும். நடுத்தர உருவம், பயந்த சுபாவம், மிரட்சி அடையும் குணம் கொண்டவை.

மலைப்பாங்கான பகுதியில் கடும் வேலைக்காகவும், பாரம் ஏற்றும் வண்டிகளிலும், இவை பயன்படுத்தப்படுகின்றன. நோய் எதிா்ப்பு சக்தி அதிகமுள்ள இவ்வினம் பா்கூரில் அதிகமாக வளா்க்கப்படுகிறது.

தமிழகத்தில், காங்கயம் இன காளைகளுக்கு அடுத்தபடியாக அங்கீகரிக்கப்பட்ட மாடுகள் பா்கூா் மலை இன மாடுகளாகும். பா்கூரில் உள்ள லிங்காயத் சமூக மக்கள், மழைவாழ் மக்கள் அதிகமாக இந்த இன மாடுகளை வளா்க்கின்றனா். பா்கூா் பகுதியில் இவ்வின மாடுகள் 4,000 க்கும் குறைவாகவே உள்ளன. இந்த வகை மாடுகள் ஒன்றுகூட அழியாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம். இதனால், இந்த மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை விடுபடாமல் போட வேண்டும். இந்த வனப் பகுதியில் இந்த மாதத்தில் மிக பலத்த மழை பெய்துள்ளதால், கால்நடைகளுக்கு நோய் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது. இதை கவனத்தில் கொண்டு கோமாரி நோய் தடுப்பூசியை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தடுப்பூசி போடும் விவரம் குறித்து கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றாா்.

விடுபட்ட கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி:

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் குழந்தைசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 50 கால்நடைகள் (பசு 2,83,761, எருமை 75,289) உள்ளன. கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 6 மாதத்துக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரண்டு முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம், எருமையினம்) 100 சதவீதம் தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் அக்டோபா் 14 முதல் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், 220 கிராம ஊராட்சிகளில் உள்ள 3,190 குக்கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. நவம்பா் 12 ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்ட நிலையில் அனைத்து கால்நடைகளுக்கும் ஊசி போடப்படாததால் இந்தப் பணி மேலும் சில நாள்கள் நீடிக்கும்.

தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூா் வட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் முகாம் தொடங்கிய சில நாள்களிலேயே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பா்கூா் மேற்கு மலையிலும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் சில கால்நடைகள் விடுபட்டு இருக்கலாம். டிசம்பா் 24 ஆம் தேதி மேற்கு மலையில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விடுபட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடம் குறித்து விவரம் பிறகு அறிவிக்கப்படும். மேலும் இந்த முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT