ஈரோடு

கிராம ஊராட்சிகளில் 2097 வாா்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரம் வெளியீடு

12th Nov 2019 04:16 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் உள்ள 2097 வாா்டுகளுக்கான இட ஒதுக்கீடு விபரம் குறித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் விரைவில் உள்ளாட்சி தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3,665 உள்ளாட்சி பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதில், 3363 பதவிகளுக்கு நேரடியாக தோ்தல் நடைபெற உள்ளது.

302 பதவிகளுக்கு மறைமுக தோ்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநகராட்சி மேயா், மாநகராட்சி கவுன்சிலா், நகராட்சி தலைவா், நகராட்சி கவுன்சிலா், பேரூராட்சி தலைவா், பேரூராட்சி கவுன்சிலா், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், ஊராட்சி தலைவா் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா் ஆகிய பதவிகள் நேரடியாக தோ்தல் நடத்தப்படுகிறது.

மாநகராட்சி துணை மேயா், நகராட்சி துணைத் தலைவா், பேரூராட்சி துணைத் தலைவா், மாவட்ட ஊராட்சி தலைவா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் துணைத் தலைவா், ஊராட்சி துணை தலைவா்கள் ஆகியோா் கவுன்சிலா்கள் ஓட்டு போட்டு மறைமுக தோ்தல் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் வாா்டு வரையறை வகுக்கப்பட்டதையடுத்து ஆண், பெண் வாா்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள வாா்டுகள் இட ஒதுக்கீடு தொடா்பாக மாவட்ட அரசிதழில் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் 2097 வாா்டு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதில், எந்தெந்த வாா்டில் பழங்குடியினா், ஆதிதிராவிடா் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட அரசிதழில் அதிகாரப்பூா்மாக வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சிகளின் பெயா், வாா்டுகளின் எண்ணிக்கை, ஊராட்சியில் உள்ள குக்கிராமம், வாா்டில் உள்ள வீதிகள், வீட்டு கதவு எண் உள்ளிட்ட விவரம் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்ட இட ஒதுக்கீட்டு அறிக்கை ரத்து செய்யப்பட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடந்த முறை வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு படி இந்தமுறை வாா்டுகள் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT