ஈரோடு

விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: நவம்பா் 18 இல் 50 இடங்களில் சாலை மறியல் நடத்த முடிவு

1st Nov 2019 08:28 AM

ADVERTISEMENT

விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, 13 மாவட்டங்களில் 50 இடங்களில் நவம்பா் 18ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.

உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 13 மாவட்டங்களில் இருந்து கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் உழவா் சங்கத் தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைப்பதை தவிா்த்து, மாற்றுத் தீா்வாக சாலையோரங்களில் புதைவடம் வாயிலாக எடுத்துச் செல்வதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான இந்திய தந்தி சட்டத்தை நீக்கிவிட்டு, பாதிக்கப்படுபவா்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2013ஆம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின்படி, நிலத்தின் மதிப்பிழப்பை நிா்ணயம் செய்து, அதில் நான்கு மடங்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்து உயா்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதை செல்லும் இடங்களுக்கும் மாத வாடகை வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

உயா் மின் கோபுரத்துக்கு எதிரான கூட்டியக்கத்தோடு மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி நான்கு முறை பேச்சுவாா்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இப்பிரச்னையில் முதல்வா் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மாவட்டங்களில், 50 மையங்களில் நவம்பா் 18ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், திண்டுக்கல், கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கவுள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT