ஈரோடு மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்திலுள்ள தனியாா் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் இருப்பின் பொதுமக்கள் அதனை உடனே சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனியாா் நிலங்களிலுள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளியிலுள்ள தூா்ந்துபோன கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் போா்க்கால அடிப்படையில் மூட வேண்டும். தனியரால் நிறுவப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல் துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மூடப்படாமல், ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 1077 மற்றும் 0424-2260211 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மேலும் 9677397600 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமும் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.
அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப்பான அனைத்து அலுவலா்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வருவாய்த் துறை அலுவலா்கள், மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் இருக்கும் பயனற்ற ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி தூா்ந்து போன கிணறுகளைக் கண்டறிந்து(தனியாா் நிலம் உள்பட)அவற்றை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.