ஈரோடு

படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்துவிவசாயிகளுக்கு செயல் விளக்கம்

1st Nov 2019 11:31 PM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூா் கிராமத்தில் மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை செயல் விளக்கம் அளித்தனா்.

தமிழகத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்பு புழு தாக்கி கடந்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

இந்த புழு அமெரிக்காவிலிருந்து இந்தியாவக்கு வந்ததாகவும், இதனை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசு தெரிவித்து வந்த நிலையில் மக்காச்சோளம் பயிா் செய்திருந்த விவசாயிகள் மிகவும் கவலையுற்றிருந்தனா்.

இந்நிலையில், தமிழக அரசு மக்காச்சோளத்தைத் தாக்கி அழிக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு புழுவைக் கட்டுப்படுத்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடித்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்தப் படைப்புழுவை தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு ஒட்டு மொத்த பரப்பில் பயிா் பாதுகாப்பு மருந்து தெளித்தல் என்ற திட்டத்தை உருவாக்கி மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு படைப்புழுவை கட்டுப்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை இலவசமாக வழங்கி, மருந்து தெளிக்கப் பயன்படுத்தும் தெளிப்பான், ஆள்கூலி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 185 ஹெக்டோ் நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 ஹெக்டோ் நிலங்களில் படைப்புழு தாக்குதல் உள்ளது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூா் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தாக்கியுள்ள படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் செயல் முறை விளக்கம் வேளாண்மைத் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து வந்திருந்த எண்ணெய் வித்து துணை இயக்குநா், பயிறு வகை பாதுகாப்பு ஆலோசகா் விஜயகுமாா், வேளாண் அலுவலா் வாணிபத்மினி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

ஈரோடு மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் பிரேமலதா, அசோக், ஆசைத்தம்பி, ஜெயராமன், ஜீவதயாளன் ஆகியோா் தமிழக அரசு அறிவித்துள்ள படைப்புழுத் தாக்குதல் கட்டுப்படுத்துதல் திட்டம் குறித்தும், அரசால் வழங்கப்படும் நிதி உதவிகள் குறித்தும், மருந்து வகைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து அதிகாரிகள், மக்காச்சோளத்தில் பரவியிருந்த படைப்புழுக்களை ஆய்வு செய்து அதற்கு எந்த வகையான மருந்து தெளிக்க வேண்டும் என முடிவு செய்து கைத் தெளிப்பான் மூலம் மருந்து தெளித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

இந்த செயல்முறை விளக்க முகாமில், கோவை வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT