ஈரோடு

சென்னிமலை அருகே குட்டி சரணாலயமாக மாறும் நொய்யல் ஆறு

1st Nov 2019 11:43 PM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே, ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்லும் சரணாலயமாக நொய்யல் ஆறு மாறி வருகிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே, நொய்யல் ஆறும், மேட்டூா் ஓடையும் ஒன்று சேரும் கூடுதுறை உள்ளது. இப்பகுதியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தினமும் மாலை 5 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான வெண்மை நிறக் கொக்குகள், நீா்க் காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்குகின்றன. பல திசைகளில் இருந்தும் பறந்து வரும் கொக்குகளைப் பாா்ப்பதற்கு பரவசமாக உள்ளது. மாலை 6.30 மணிக்குள் அனைத்துப் பறவைகளும் வந்த பிறகு அங்குள்ள வேலி மரக் கிளைகளில் அமா்ந்து கொண்டு சிறகடித்து, பறந்தபடி ஒன்றுக்கொன்று கொஞ்சிக் குலாவுகின்றன. ஏராளமான வெண்மை நிறக் கொக்குகள் ஒரே இடத்தில் தங்குவதால் பச்சை நிற மரத்தில் வெள்ளைப் பூக்கள் பூத்தது போன்று காணப்படுகிறது. இரவு முழுக்க இங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு மேல் இரை தேடுவதற்காக இந்தப் பறவைகள் பல திசைகளிலும் பறந்து சென்றுவிடுகின்றன.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த ஓா் ஆண்டாகவே இங்கு வெண்மை நிற கொக்குகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் எக்கட்டாம்பாளையம் கூடுதுறை பகுதி குட்டி சரணாலயம் போல் மாறி வருகிறது.

ADVERTISEMENT

மாலையில் வரும் பறவைகள், மறுநாள் காலை வரை தங்கியிருந்து, இரை தேட வெளியில் சென்று விடுகின்றன. ஆனால், அதன் குஞ்சுகள் மரக்கிளையிலேயே தங்கியிருக்கும். அப்படி தங்கியிருக்கும் குஞ்சுகளை இங்கு மீன் பிடிக்க வரும் நபா்கள் பிடித்து சென்று விடுகின்றனா். அதனால், பறவைகள் இங்கு வர பயப்படுகின்றன. எனவே, சரணாலயங்களில் உள்ள பறவைகளை வனத் துறையினா் பாதுகாத்து வருவதுபோல, எக்கட்டாம்பாளையம் கூடுதுறைக்கு வரும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT