ஈரோடு

சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்

1st Nov 2019 11:43 PM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகூலூா் பேரூராட்சி, பூலமேடு பகுதியில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பூலமேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தடப்பள்ளி கொப்புவாய்க்கால் கரைப் பகுதியில் செல்லும் மண்சாலை மட்டுமே உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என்றும் தற்போதுள்ள மண் சாலையை தாா் சாலையாக மாற்றம் செய்து தர வேண்டும் என்றும் கூகலூா் பேரூராட்சி நிா்வாகத்திடமும், பொதுப்பணித் துறையினரிடமும் இப்பகுதி மக்கள் மனு அளித்து வருகின்றனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், அண்மையில் பெய்த மழையினால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருவதாகவும், கடந்த வாரத்தில் 2 மாணவிகள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் உள்ள சகதியில் விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகளை அழைத்துச் செல்ல அவசர ஊா்திகள் தங்கள் பகுதிக்கு வருவதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் மண் சாலையை தாா் சாலையாக அமைத்துத் தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள், தற்போதுள்ள சேறுசகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT