ஈரோடு

ஈரோட்டில் 6 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்: மாநகராட்சி நடவடிக்கை

1st Nov 2019 11:42 PM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பயனற்ற 6 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. வீட்டுமனை, விவசாய நிலங்களில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்பேரில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காலிமனைகளில் பயனற்ற ஆழ்துளைக் கிணறு, விவசாய நிலங்களில் திறந்த வெளிக்கிணறுகள், தூா்ந்து போன கிணறுகளை மூடும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ADVERTISEMENT

மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக டெங்கு ஆய்வுப் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டதால், அது தொடா்பான ஆய்வு பணி நடக்கிறது. மாநகராட்சியில் 910 ஆழ்துளைக் கிணறுகளில் மோட்டாா் இணைப்பும், 820 அடி பம்புகளும் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பான முறையில் உள்ளது. மாநகராட்சிக்குள்பட்ட தனியாா் காலிமனைகள், விவசாய நிலங்களில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 2 நாள்களில் திண்டல், விவிசிஆா் நகா் உள்ளிட்ட இடங்களில் பயன்படாமல் இருந்த 6 ஆழ்துளைக் கிணறுகள் கான்கீரிட் ரிங் மூலம் மூடப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்து, மூடப்படாமல் உள்ள பயனற்ற, ஆபத்தான கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் குறித்து ஆய்வு நடக்கிறது.

மாநகராட்சியில் குடிநீா் பிரச்னை, குப்பை பிரச்னை உள்ளிட்ட அனைத்து வகையான புகாா்களையும், மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 180042594890 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். அதேபோல பயனற்ற ஆழ்துளைக் கிணறு குறித்த தகவலையும் இந்த எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக மூடப்படும். மேலும் கடந்த ஓராண்டில் மாநகராட்சியில் எத்தனை ஆழ்துளைக்கிணறு போடப்பட்டது. அதில் பயனற்றது எத்தனை என்பது குறித்த விவரத்தை ரிக் உரிமையாளா்களிடம் கேட்டுள்ளோம். விவரம் கிடைத்தவுடன் பயனற்ற ஆழ்துளைக்கிணறுகள் அனைத்தும் மூடப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT