ஈரோடு

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட  ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்

29th Jun 2019 07:37 AM

ADVERTISEMENT

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 20ஆம் ஆண்டு மகாசபைக் கூட்டம் தலைவர் ஆர்.மோகனசுந்தரம் தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது. மாநில ஆட்டோ தொழிலாளர் சம்மேளன துணை தலைவர் பி.கே.சுகுமாறன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், துணைச் செயலாளர் பொன்பாரதி, பொதுச் செயலாளர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மோட்டார் வாகனத் தொழிலை பெரும் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முறையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை கைவிட வேண்டும். தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3,500 ஆட்டோ ஓட்டுநர்கள், மாநில அளவில் 3 லட்சத்துக்கும் மேலான ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்.
 ஆட்டோக்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ நிறுத்தங்களையும் மாநகராட்சி அங்கீகாரம் வழங்கி, அடிப்படை கட்டமைப்பு செய்துதர வேண்டும்.  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.  ஓட்டுநர் உரிமத்தை வைத்து ஆட்டோ வாங்க வங்கிகள் கடனுதவி அளிக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி 60 வயது கடந்த ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். கட்டுபடியாகும் வகையிலான மீட்டர் கட்டணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கெளரவத் தலைவராக எஸ்.சுப்பிரமணியன், தலைவராக ஆர்.மோகனசுந்தரம், பொதுச்செயலாளராக ஷேக் தாவூத், பொருளாளராக கே.ஸ்ரீதர், துணைத் தலைவர்களாக மாணிக்கம், வேணுகோபால், ராஜன், துணை செயலாளர்களாக வடிவேல், அயூப்கான், செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT