ஈரோடு

நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

29th Jun 2019 07:36 AM

ADVERTISEMENT

கட்டாய நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பசுபதி தலைமையில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கட்டாய நன்கொடை வசூல் தடைச் சட்டம் 1992 இல் இயற்றப்பட்டு 27 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையின்போது கட்டாய நன்கொடை வசூலிப்பது தொடர் கதையாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கட்டாய நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தமிழ்நாடு உயர் கல்வி ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளது. உயர் கல்வி ஆணைய சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டு வந்து ஆசிரியர் பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்க வழிவகை செய்ய வேண்டும். 
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பாரபட்சமாக பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக பணி நியமனம் செய்வதும், பணி உயர்வு அளிப்பதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கிறார். துணைவேந்தர் பணியில் சேர்ந்த நாள் முதல் இப்போது வரை பதவி உயர்வு அளிக்கப்பட்ட நபர்கள் தொடர்பாகவும், பணி நியமனம் தொடர்பாகவும் உள்ள கோப்புகளை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஈரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரியை உடனடியாக அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாநிலத் தலைவர் சாந்தி, பொதுச் செயலாளர் சேட்டு, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT