ஈரோடு

கடைகள் அகற்றப்பட்ட பிறகு கூடிய ஜவுளிச்சந்தை:  60 சதவீத விற்பனை

31st Jul 2019 06:59 AM

ADVERTISEMENT

ஈரோடு கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்டுவதற்காக  வாரச்சந்தை கடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகு கூடிய ஜவுளிச் சந்தையில் 60 சதவீதம் வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 ஈரோடு கனி மார்க்கெட்டில் ரூ. 51 கோடி மதிப்பில் வணிக வளாகம்  கட்டப்படவுள்ளது. இதற்காக கடைகள் அகற்றப்பட்ட பிறகு வார ஜவுளிச் சந்தை செவ்வாய்க்கிழமை கூடியது. வணிக வளாகம் கட்டும் பணி நடைபெறும் இடத்தை தவிர மற்ற காலியிடத்தில் தற்காலிக கடைகள் வைக்க மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அங்கு வியாபாரிகள் வரிசையாக கடைகள் அமைத்திருந்தனர். வழக்கமாக இருக்கும் கடைகளை விட, 120 கடைகள் குறைவாக இருந்தன. இருப்பினும், ஆடி மாதம் காரணமாக விற்பனை ஓரளவு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வாரச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது:  ஈரோடு வாரச் சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, கரூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் வந்து விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் 450 வியாபாரிகள் வந்து கடைகள் வைத்தனர்.  
 கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்டுவதற்காக வாரச்சந்தை கடைகள் கடைகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டதால், வாரச்சந்தையில் 120 கடைகள் வரை குறைந்து விட்டது. இருப்பினும் ஆடிப் பண்டிகை காரணமாக மஞ்சள் சேலை விற்பனை, ஆடிப்பெருக்கு விற்பனை ஓரளவு இருந்தது. 
மஞ்சள் சேலை ரூ.120 முதல் ரூ.350 வரையும்,  ஆயத்த ஆடை ரகம் ரூ.100 முதல் ரூ.500 வரை, லுங்கிகள் ரூ.85 முதல் ரூ.220 வரையும் விற்கப்பட்டது. கடைகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், ஆடிப்பண்டிகை காரணமாக 60 சதவீத விற்பனை நடந்தது என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT