பெருந்துறை கோட்டத்தில் பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின்பாதை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய பெருந்துறை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின் விபத்துகளை தடுக்க பழுதான மின் கம்பங்களை மாற்றியும், தாழ்வான மின் பாதையை சரி செய்தும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பெருந்துறை கோட்டத்துக்கு உள்பட்ட சென்னிமலை, பெருந்துறை, ஈங்கூர், முகாசிபிடாரியூர், விஜயமங்கலம், பல்லகவுண்டன்பாளையம், குன்னத்தூர், வெள்ளிரவெளி, வெள்ளோடு, சீனாபுரம், கருமாண்டிசெல்லிபாளையம், திங்களுர், நல்லாம்பட்டி, குள்ளம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின் பாதை மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மின் சாதனங்கள் தொடர்பான புகார்களை தபால் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.
தபால் மூலம் தகவல் தெரிவிப்பவர்கள் செயற்பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வெங்கமேடு, பெருந்துறை 638052 என்ற முகவரிக்கு தொலைபேசி எண் அல்லது செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவிப்பவர்கள் தினமும் காலை 10.30 மணி முதல் 5.30 மணி வரை 04294-220553 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் 9445442422 என்ற செல்லிடபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். இதுபோல் கட்செவி அஞ்சலில் 9445851912 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.