ஈரோடு

380 ஹெக்டேரில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க  ரூ. 2.61 கோடி மானியம் ஒதுக்கீடு

27th Jul 2019 06:54 AM

ADVERTISEMENT

ஈரோடு வேளாண் வட்டாரத்தில் பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 380 ஹெக்டேருக்கு ரூ. 2.61 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு வேளாண்மை உதவி இயக்குநர் சு.சங்கர் கூறியதாவது:
ஈரோடு வட்டாரத்தில் பிரதமரின் வேளாண் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் கடந்த ஆண்டு போல நடப்பாண்டுக்கும் 380 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ. 2.61 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கரும்பு, மக்காசோளம், தென்னை, பருத்தி, பயறு வகை பயிர்கள் உள்பட அனைத்துப் பயிர்களுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள், தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள், மழைத்தூவான் கருவிகளைப் பெறலாம். ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை இணைத்து இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இத்திட்டத்துக்காக அனைத்துக் கிராமங்களிலும் விழிப்புணர்வு முகாம், கிராம கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இத்திட்டம் மூலம் பாசன நீரை சிக்கனப்படுத்துவதுடன், பயிரின் வேர் அருகில் பயிருக்குத் தேவையான சத்துகள், மருந்துகள் சேதாரமின்றிக் கிடைக்கின்றன.
களைத் தொல்லை குறைந்து, கூலி ஆள் செலவு மீதமாகும். வறட்சிக் காலத்திலும், குறைந்த நீரில் நிறைந்த மகசூலைப் பெறலாம்.  மேலும்  விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர், வட்டார வேளாண் விரிவாக்க மையம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், ஈரோடு என்ற முகவரியிலும், வேளாண் அலுவலர் மு.நாசர்அலியை  99449 20101 என்ற செல்லிடபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT