ஈரோடு

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில்  விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு பணி ஒதுக்கீடு

27th Jul 2019 07:02 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு முதல் முறையாக தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  
இந்தியாவில் விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆண்டுக்கு 100 நாள்கள் பணி வழங்கி வருகிறது.  
இத்திட்டத்தை மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திலும் செயல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம், பழங்குடியினர் சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில்,  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்தில் வசிக்கும் 50க்கும்  மேற்பட்ட குடும்பத்தினருக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக பணி வழங்கப்பட்டுள்ளது. 
அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் விளாங்கோம்பை மலைவாழ் மக்களின் கால்நடை வளர்ப்புடன் வனப்பகுதியில் சேகரிக்கப்படும் பொருள்களை விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வருவாய் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவோ, மேல் படிப்புக்கு அனுப்பவோ முடிவதில்லை. எனவே  இவர்களது வாழ்வாதாரத்தையும் வருவாயையும் மேம்படுத்த,  முதல் முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ்100 நாள் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில், மலையிலிருந்து வழிந்தோடும் மழைநீரை தடுப்புகள் அமைத்து சேகரிக்கும் பணியை வட்டார வளர்ச்சித் துறை வழங்கியுள்ளது. இப்பணியில் விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
முதன்முதலாக அரசு தங்களுக்கு வேலை வழங்கியுள்ளதாகவும், இந்தப் பணியை நல்ல முறையில் செய்து தங்கள் கிராமத்தை மேம்படுத்த உள்ளதாகவும், விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT