கோபிசெட்டிபாளையம் அருகே கசிவுநீர்க் குட்டை உடைப்பை சரி செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி விவசாயிகள் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கோபிசெட்டிபாளைம் வட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள பகவதி நகரில் கசிவுநீர்க் குட்டையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
பகவதி நகரில், 2005-2006ஆம் ஆண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மூலம் சம்பூர்ண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ. 9 லட்சம் செலவில் இந்தக் கசிவுநீர்க் குட்டை தடுப்பணை கட்டப்பட்டது.
அணைக்கட்டின் உள்பகுதி 10 அடி உயரமும், பின்பகுதி 6 அடி உயரமும் உள்ளது. மழை பெய்து தண்ணீர் வந்த பிறகு குட்டையின் இரு புறமும் உடைப்பு ஏற்பட்டு பல ஆண்டுகளாக நீர் தேங்காமல் வீணாகி விட்டது.
இந்தக் குட்டையின் இடது புறம் 10 அடியும், வலது புறம் 20 அடியும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குட்டையின் உடைப்பை சரிசெய்தால், 3 கி.மீ. முதல் 5 கி.மீ. தூரம் வரை நீர் தேங்கும். அதனால் சுமார் 80 மில்லியன் கனஅடி வரை நீரை சேமிக்க முடியும். அதன்மூலம் சுற்றுப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும். வன விலங்குகளுக்குத் தேவையான குடிநீர் கிடைக்கும் நிலை உருவாகும் போது விளைநிலங்களில் அவை புகுவதும் தடுக்கப்படும்.
எனவே கசிவுநீர்க் குட்டையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து மழைநீர் தேங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.