ஈரோடு

டேக்வாண்டோ போட்டி: 150 மாணவர்கள் பங்கேற்பு

22nd Jul 2019 10:14 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி ஈரோடு ரயில்வே காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 இந்தப் போட்டிக்கு சங்கத் தலைவர் கே.ஜெ.டிடோ தலைமை வகித்தார்.  ஈரோடு ரயில்வே சீனியர் செகண்டரி பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.கார்த்திகேயன் போட்டியை தொடங்கிவைத்தார்.
 இந்தப் போட்டி 11 வயதுக்கு உள்பட்டவர்கள், 14 வயதுக்கு உள்பட்டவர்கள், 17 வயதுக்கு உள்பட்டவர்கள் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளில் இருந்து மொத்தம் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதிக புள்ளிகளை பெற்று வெற்றி அடைந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 திருவள்ளூர் மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் என்.வெங்கடேசன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  ஈரோடு மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்க துணைத் தலைவர்கள் ஏ.சரவணபாபு, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஏசுரா ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 மாவட்ட அளவிலான போட்டிகளில் 11 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் தருமபுரியில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியிலும், 14 வயதுக்கு உள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் பெரம்பலூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு விளையாட தகுதி பெற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT