ஈரோடு

கோயில் நிலங்களை மீட்க கோரி டிசம்பரில் போராட்டம்: அகில பாரத இந்து மகா சபா  அறிவிப்பு

22nd Jul 2019 10:10 AM

ADVERTISEMENT

ஆக்கிரமிப்புகளில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும், குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சங்கு ஊதும் போராட்டம் நடத்தப்படும் என அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
 அகில பாரத  இந்து மகா சபா ஆலயப் பாதுகாப்பு பிரிவு ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். ஆலயப் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் ராம நிரஞ்சன் முன்னிலை வகித்தார்.
 இதில் பங்கேற்ற அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பராமரிப்பின்றி உள்ளன. மேலும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும். ஆனால் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த 108 கோயில்களுக்கு குடமுழுக்கு  செய்யப்படாமல் உள்ளது.  
 இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள 3,000  கோயில்களுக்கு சொந்தமான பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்ரமிப்பில் உள்ளன. குறிப்பாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் நிலங்கள் ஆக்ரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்க மீட்புக் குழுக்கள் உள்ளன. இருப்பினும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மீட்புக் குழு ஒன்று அமைத்து இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க உள்ளோம். 
 அத்திவரதர் சுவாமியை  தரிக்க வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்காமல் உள்ளது. அத்திவரதரை தரிசிக்க 5 முதல் 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். அப்போது குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பக்தர்கள் பாதிக்கின்றனர். அதே நேரத்தில் விஐபி தரிசனம் மட்டும் நன்றாக நடக்கிறது.  எனவே, அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். 
 கோயில் நிலங்கள் மீட்பு, குடமுழுக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் மாநில அளவில் மாவட்ட தலைநகரங்களில் சங்கு ஊதும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT