ஈரோடு

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டில் 1.68 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

22nd Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் நிகழாண்டில் புதிதாக 1.68 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நம்பியூரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். நம்பியூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் கட்டப்பட்டுவரும் ரவுண்டானா, பேருந்து நிலைய வணிக வளாகக் கட்டடங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  நம்பியூரில் மின் மயானம் அமைப்பதற்காக இடம் பார்வையிடப்பட்டது. கோபியில் கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் இயக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன நடமாடும் கால்நடை மருத்துவமனை செயல்படுத்தப்படும். கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக நோயாளிகள் டயாலிசிஸ்  செய்ய 3 கருவிகள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு 12 பேருக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஐசிடி என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு அறிவியல் ஆய்வகம் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும்,
பள்ளிக் கல்வித் துறையில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நிறைவேற்ற கருணை உள்ளம் படைத்தவர்கள் நிதி உதவி செய்ய முன்வர வேண்டும். 2013- 2014 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதி பணி வாய்ப்புக்காக 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும். அதில் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்படும். 
ஈரோடு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொண்டை அடைப்பான் நோய்க்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர், உணவு, சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் தற்காலிக நூலகங்கள் அமைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 68  ஆயிரத்து 414 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட்டும் பள்ளிகளை மேம்படுத்த முடியும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT