ஈரோடு

முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்றால் நடவடிக்கை

16th Jul 2019 07:13 AM

ADVERTISEMENT

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உண்மை நிலை விதைகள் விற்பனை செய்பவர்கள், முளைப்புத் திறனை உறுதி செய்து அதன் அடிப்படையில் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் எம்.வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களைக் கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசின் விதைச் சான்று மற்றும் அங்கக துறையின் விதை ஆய்வு பிரிவு செயல்படுகிறது.
வேளாண்மை பல்கலைக் கழகம், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்கள், விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உரிமம் பெற்று, விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் முளைப்புத்திறன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே, விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதை விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது, விதைக் குவியலுக்குரிய பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலையும் அனுப்ப வேண்டும்.
பகுப்பாய்வு முடிவு விரைவில் தேவைப்படும் பட்சத்தில், முன்னுரிமை முறையில் ஆய்வுக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். விவர அட்டையில் 14 விவரங்களுடன் உள்ள உண்மை நிலை விதைகளின், உண்மை நிலை அட்டை சிப்பங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT