அரசுத் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை பறித்துக்கொண்டு விவசாயிகள் மீது அறிவிக்கப்படாத போரை மத்திய, மாநில அரசுகள் தொடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள் உழைக்கும் மக்கள் மீது கடுமையான வரிகளை திணித்துள்ளன. கார்ப்பரேட் நிர்வாகங்கள் மீது இருந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. சில வரிகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கை ஊக்கம் தருவதாக இருந்தால் பங்கு சந்தையில் ஏற்றம் காணப்பட வேண்டும். ஆனால், நிதிநிலை வெளியிட்ட நாளில் இருந்து பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இப்போது, அயல்நாட்டு முதலீடு (எப்டிஐ) இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு திரும்பிச் செல்கிறது. பரஸ்பர நிதி ( மியூச்சுவல் பண்ட்) ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஒரே நாளில் வெளிநாட்டுக்கு போய் உள்ளது. இவை அனைத்தும் தொழில் துறையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா பிரகடனம் செய்யாத வணிகப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரான், சீனா போன்ற நாடுகளின் வணிக வளர்ச்சியை தடுப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
டிரம்ப்புக்கு எதிராக வணிகப்போர் நடத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை.
இதனால் அதிக விலை விற்கும் நாட்டில் கச்சா எண்ணெயை டாலர் கணக்கில் இந்தியா வாங்கி வருகிறது. மேலும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் கச்சா எண்ணெயை 30 சதவீதம் அமெரிக்க நிறுவனம் பங்கு போட்டு, அவர்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லும் உரிமையை பெற்றுள்ளது. பற்றாக்குறை உள்ள நிலையில் கச்சா எண்ணெயை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.
இதன்விளைவாக நிதிநிலை அறிக்கையின் முதல் நாளிலேயே கலால் வரி உயர்த்தப்பட்டு பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50
உயர்த்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் விரும்பியபடி விலையை உயர்த்தி வருகின்றனர்.
இதேபோல், விவசாயத் துறையிலும் அறிவிக்கப்படாத போரினை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கைப்பற்றி உயர்மின் கோபுரம் அமைத்து வருகின்றனர். இதனைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஜூலை 18 ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் நடத்த உள்ளனர் என்றார்.