பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக காவிரி டெல்டா பகுதிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறப்பு: 10 நாள்களுக்குத் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
சத்தியமங்கலம், ஜூலை 14: பவானிசாகர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவைக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 10 நாள்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். அணை மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீர் அணைக்கு முக்கிய நீர்வரத்தாக உள்ளது.
நீலகிரி மற்றும் கேரள மலைப் பகுதியில் பெய்யும் மழை நீர் மாயாற்றில் கலப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் பவானிசாகர் அணையில் இருந்து காவிரி டெல்டா விவசாயப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர்த் தேவைக்கு தினந்தோறும் விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 10 நாள்கள் தண்ணீர் திறப்பு நீடிக்கும். இந்த தண்ணீர் சத்தியமங்கலம், கொடிவேரி, பவானி கூடுதுறை வழியாக கல்லணை சென்றடையும்.
இதன் மூலம் காவிரி ஆறு பாயும் ஈரோடு, கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறும்.
அணையின் தற்போதைய நிலவரம்: அணையின் நீர்மட்டம் 59.11 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 968 கனஅடியாகவும் அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 7 டிஎம்சி ஆகும்.