ஜம்பை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பவானி - குமாரபாளையம் அரிமா சங்கம், எஸ்.எஸ்.எம். மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்தப் பேரணிக்கு ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் டி.தனலட்சுமி தலைமை வகித்தார்.
அரிமா சங்கத் தலைவர் கே.எஸ்.இளவரசன், மருத்துவ அலுவலர் மேனகா, ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலர் எம்.செந்தில்குமரன் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மகேந்திரன் வரவேற்றார்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஎஸ் கொசு உற்பத்தியாவதை தடுக்க தண்ணீரை உள்ள பாத்திரத்தை மூடிவைக்க வேண்டும். சுற்றுப்புறப் பகுதியில் தண்ணீர் தேங்காமலும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் ஏ.எல்.ராஜு, மாவட்ட மலேரியா அலுவலர் தையல்நாயகி, அரிமா சங்கச் செயலர் சம்பத், பொருளாளர் கே.ஸ்ரீனிவாசன், மருந்தியல் கல்லூரி முதல்வர் சங்கமேஸ்வரன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
பேரணியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.