ஈரோடு

கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

15th Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து கோயில் சொத்துகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கோயிலில் சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு  இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ப.சக்தி முருகேஷ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கு.பூசப்பன் முன்னிலை வகித்தார். 
இதில் இந்து முன்னணி மாநிலப் பொறுப்பாளர் மூகாம்பிகை மணி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் இதரச் சொத்துகள் மூலமாக கோயில்களுக்கு ரூ.5,000 கோடி வருவாய் வரவேண்டியுள்ளது. ஆனால், ரூ.120 கோடி மட்டுமே வருவாய் வருவதாக அரசு கூறுகிறது.
கேரளம் மற்றும் வடமாநிலங்களில் கட்டணமே இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியும்போது தமிழகத்தில் மட்டும் எதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது?. 
கோயில்களில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை ஏற்படுத்தும் கட்டண தரிசன முறையை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் க.கார்த்தி, பொ.சங்கர், து.முரளி, துணைத் தலைவர் க.கராத்தே சிவா, செயற்குழு உறுப்பினர்கள் ப.ரமேஷ், அ.சண்முகம், அ.ராஜா சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT