ஈரோடு

கடம்பூர் மலைப் பகுதியில் மீண்டும் ஏடிஎம் மையத்தை திறக்க கோரிக்கை

15th Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

கடம்பூர் மலைப் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஏடிஎம் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலைப் பகுதியில், குத்தியாலத்தூர், குன்றி, மாக்கம்பாளையம் ஆகிய மூன்று பெரிய ஊராட்சிகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
 இப்பகுதி முழுமையாக அடர்ந்த வனத்துடன் கூடிய மலைப் பகுதியாகும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடம்பூர் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதும் இயந்திரத்தை அகற்றினர். பின்னர் அந்த அறை பூட்டப்பட்டது. தற்போது வரை ஏடிஎம் மையம் மீண்டும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து கடம்பூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சி.துரைசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தார். அதன் விவரம்: கடம்பூர் மலைப் பகுதியில் ஏடிஎம் மையம் இல்லாததால் இப்பகுதி மக்கள் 30 கி.மீ. வரை கடம்பூர் வந்து இங்கிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சத்தியமங்கலம் செல்லும் அவலம் தொடர்கிறது.
இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பிற உதவித்தொகை பெறுவோராக உள்ளனர்.
மேலும் வெளியூரில் வசிக்கும் தங்களது குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். ரூ.500, ரூ. 1,000 பணத்தை எடுப்பதற்காக சத்தியமங்கலத்துக்கு ரூ. 150 செலவிட்டு ஒரு நாள் வேலையை இழந்து வர வேண்டி உள்ளது. இதனால் கடம்பூர் பகுதியில் நிரந்தரமாக ஏடிஎம் மையம் அமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கடம்பூர் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இங்கு சரியாக மின்சாரம், இணைய தள இணைப்பு கிடைப்பதில்லை. மலைப் பகுதியாக உள்ளதால் போதுமான இடவசதி, பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இங்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் வேறு சில காரணங்களாலும் ஏடிஎம் சேவையை தொடர முடியவில்லை என்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT