அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச படகு வடிவமைப்புப் போட்டியில் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுவினர் எடை குறைவான கான்கிரீட் படகை வடிவமைத்து இயக்கிக் காட்டி சாதனை படைத்துள்ளனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் பயிலும் 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் எடைகுறைவான இலகுரக கான்கிரீட் படகு வடிவமைத்து மும்பையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றனர். இந்த அணியினருக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச படகு வடிவமைப்புப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து 25 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் வடிவமைத்த எடைகுறைவான இலகுரக படகை அங்குள்ள ஏரியில் இயக்கி காட்டினர்.
இந்த படகு வடிவமைத்ததற்காக போட்டியை நடத்திய அமைப்பினர் மாணவர்களின் படகு வடிமைப்புக்கு பரிசாக 1,500 டாலர் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டினர்.