ஈரோடு

குடிநீர்த் திட்டத்துக்கான மாற்று யோசனை நிராகரிப்பு: கோபியில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

12th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

பெருந்துறை பகுதிக்கான குடிநீர்த் திட்டத்துக்கு கொடிவேரி தடுப்பணையில்  இருந்து தண்ணீர் எடுக்க  விவசாயிகள் தெரிவித்த மாற்று இடத்தை குடிநீர் வடிகால் வாரியம்  ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தண்ணீர் எடுத்தால் பாசனத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  
 இதுகுறித்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி தெரிவித்ததாவது: 
பெருந்துறை-கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் தற்போது நீர் எடுக்க உத்தேசித்துள்ள இடம் கொடிவேரி அணைக்கட்டின் பாதுகாக்கப்பட்ட இடமாகும். தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு, நீர் திறக்கும் கதவுகளுக்கு அழுத்தப்பட்ட நீரினை தேக்கி வைக்கும் இடமாகும்.
தடப்பள்ளி பாசன நீர்க் கதவுகளின் அருகாமையில் (40 மீட்டரில்) அமைக்கப்படும், இக்குடிநீர் திட்டத்துக்கான கிணற்றால் 520 ஆண்டுகளாக உள்ள பாசனப் பகுதி வாய்கால்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் பாதிக்கப்படும். இவ்விடத்தில் ரிங் வெல் எனப்படும் பிரமாண்ட கிணறு அமைப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித் துறையினரிடம் மனு வழங்கினோம்.
 இதை ஏற்று பெருந்துறை எம்எல்ஏ மற்றும் அப்பகுதியினர், கொடிவேரி பாசன விவசாயிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எட்டவில்லை. தற்போது கிணறு அமைக்கும் இடத்தில் கிணறு பணியை கைவிட்டு,  அதை மாற்றி தற்போது அமையும் இடத்தில் இருந்து 100 மீட்டகுக்கு அப்பால், அணைக்கு மேல் அல்லது கீழாக ஆற்றின் மையத்தில் நீர் அதிகம் உள்ள இடத்தில் அமைக்கலாம் என்பது எங்கள் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை குடிநீர் வடிகால் வாரியம் ஏற்காததால் பாசனப் பகுதியை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே இதனைக் கண்டித்து கோபி-ஈரோடு சாலை பெரியார் திடலில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT