மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கே.செல்லமுத்து தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டை துவக்கிவைத்து அக்கட்சியின் தலைவர் கே.செல்லமுத்து பேசியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தவொரு பயனும் இல்லை. 2024 ஆம் ஆண்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆகும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. எப்படி இது சாத்தியமாகும்?
விவசாயிகளுக்கான கடன் ரத்து, விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் போன்ற அம்சங்கள் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது.
கடன் ரத்து மற்றும் நதிகள் இணைப்பை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.