ஈரோடு

அரசுப் பள்ளியில் மாணவர் பேரவைத்தேர்தல்

6th Jul 2019 09:15 AM

ADVERTISEMENT

பவானிசாகர் அருகேயுள்ள கோடேபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அரசுப் பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 இப்பள்ளியில் 190 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து மாணவர்கள் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் புகைப்படத்துடன் தயார் செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட விரும்பும் மாணவர்கள்  வேட்புமனு தாக்கல் செய்தனர். 
பின்னர் தேர்தலில் போட்டியிடும் 11 மாணவ, மாணவியர் வாக்கு கேட்டு மாணவர்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து  வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 190 மாணவ, மாணவியர் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். மாணவரின் பூத் சிலிப்பை பெற்றுக்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா சரிபார்த்து பின்னர் பதிவேட்டில் கையெழுத்து பெற்று கைவிரலில் மை வைக்கப்பட்டு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்ட மாணவர்கள் வாக்களிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள மறைவான இடத்தில் வாக்குப்பதிவு செய்து வாக்குச்சீட்டை பெட்டியில் போட்டனர். தேர்தலில் 93 சதவிகித வாக்குகள் பதிவானது. 
இதையடுத்து மதியம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பொதுத்தேர்தல்போல் பள்ளியில் தேர்தல் நடத்தப்பட்டதால் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிய முடிந்ததாகவும் வருங்காலங்களில் அரசியலில் பங்கு பெற ஆர்வமாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சித்ரா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT