ஈரோடு

பர்கூர் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்கும் திட்டம்: விரைவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை

4th Jul 2019 06:53 AM

ADVERTISEMENT

மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பர்கூர் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பர்கூர் ஊராட்சி அந்தியூர்-மைசூரு சாலையில் மலைக் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் மடம், சுண்டபூர், தாமரைக்கரை, அணைபோடு, கத்திரிமலை, ஒன்னகரை, ஊசிமலை, சோழகனை, ஆலனை, பர்கூர், பெஜலட்டி, எப்பத்தாம்பாளையம், மட்டிமரதல்லி, தம்மரெட்டி, பெஜில்பாளையம், ஈரட்டி, கல்வாரை, கோவில்நத்தம், மின்தாங்கி, ஒசூர், தட்டகரை, சின்னசெங்குளம், தேவர்மலை, எலச்சிபாளையம், கடையீரட்டி, கொங்காடை, குட்டையூர், ஒந்தனை, பெரியசெங்குளம், தாளக்கரை, தொல்லி, துருசுனாம்பாளையம், வெள்ளிமலை, வேலாம்பட்டி ஆகிய 34 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 18,000 பேர் வசிக்கின்றனர். 
கத்திரிமலை கிராமத்துக்கு சேலம் மாவட்டம் கொளத்தூர் சென்று அங்கிருந்து சுமார் 4 மணி நேரம் மலைப் பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். சுமார் 80 வீடுகள் உள்ள இந்த மலைக் கிராமத்துக்கு இப்போது வரை மின்சார வசதி இல்லை. 
இந்த நிலையில் உள்ள மலைக் கிராமங்களில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்த பர்கூர் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  ஆனால் அதன்பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதுகுறித்து சுடர் அமைப்பின் தலைவர் என்.நடராஜ் தெரிவித்ததாவது:  பர்கூர் மலைக் கிராமங்களில் குடிநீர், சாலை, மின்சாரம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பிற மலைப் பகுதிகளை ஒப்படுகையில் 50 சதவீதம் அளவுக்குகூட இல்லை. இதற்கு காரணம் பர்கூர் மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பதுதான். இதனால் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்க வேண்டும் என தொடர்ந்து மலைக் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஊராட்சிகள் பிரிப்பு குறித்து அரசாணையை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்றார். 
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
பர்கூர் ஊராட்சியை பிரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.  மக்கள் தொகை அதிகம் உள்ள 5 கிராமங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 5 ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் என ஊராட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. 
இப்போது உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பாக காத்திருக்கிறோம். இதனால் தேர்தல் முடியும் வரை புதிய ஊராட்சிகள் குறித்த அறிவிப்பு இருக்க வாய்ப்பில்லை. தேர்தல் முடிந்த பிறகே, ஊராட்சிகளைப் பிரிப்பது குறித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரின் கவனத்துக்கு கடிதம் அனுப்பப்படும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT