ஈரோடு

நாய் குறுக்கே வந்ததால் விபத்து: தந்தை சாவு; மகள் படுகாயம்

4th Jul 2019 06:52 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதில் தந்தை உயிரிழந்தார்.
கொடுமுடி தாலுகா பழனிகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (55). சோளங்காபாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் இந்துமதி (23). இவர்கள் இருவரும் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் உள்ள பொன்காளியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 
பாசூர் சாலையில் குரங்கன்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது,  திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஜம்புலிங்கம், இந்துமதி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 
அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜம்புலிங்கம் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரது மகள் இந்துமதிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT