ஈரோடு

ஊரகப் பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் சூழல் இல்லை

4th Jul 2019 06:50 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு பெரிய அளவில் இல்லாததால், இந்த ஆண்டில் வீட்டுக் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் சூழல் இல்லை என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்னை அதிகமாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் பொது குடிநீர்க் குழாய்கள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி காரணமாக பெரும்பாலான கிராமங்களில் இந்த நடைமுறை இருந்தது.  ஆனால் இந்த ஆண்டில் இதுபோன்ற நிலை எந்த ஊராட்சியிலும் இல்லை என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ் கூறியதாவது: 
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுகிறது. 
இந்த மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் இருந்து 46 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுவதால் 225 ஊராட்சிகளில் 192 ஊராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தவிர அந்த ஊராட்சிகளில் ஆழ்துளைக் கிணறு, பொதுக்கிணறு உள்ளிட்ட பிற நீராதார அமைப்புகள் உள்ளதால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. வழங்கப்படும் நீரின் அளவு சில இடங்களில் 
குறைந்துள்ளது.
தண்ணீர் சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும், ஊரகப் பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் சூழல் இப்போது இல்லை. அதே சமயத்தில் புதிதாக இணைப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. 
மேலும் வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா? என்பது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. 
மேலும் கிராமப் பகுதிகளில் தேவையான இடங்களில் கூடுதலாக குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தூர்ந்து போன ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இதுபோன்று 500-க்கும் மேல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் எந்த இடத்திலும் 3 நாள்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற நிலை இல்லை.  லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் நிலையும் இல்லை. புதிதாக ரூ.3 கோடி செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.  இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுக்க அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது நிதி, மாவட்ட ஊராட்சி நிதி, எம்எல்ஏ, எம்.பி. நிதியை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்போதைக்கு புதிதாக ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT