ஈரோடு

மாநகராட்சியில் சொத்து வரியைக் குறைக்க கோரிக்கை

2nd Jul 2019 08:31 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் என ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்கள்கிழமை நடைபெற்ற குறை கேட்பு கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவனிடம்,  சங்க நிர்வாகிகள்  அளித்த மனு விவரம்: 
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, குடியிருப்புக்கு 50 சதவீதமும், வணிகத்துக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் படிப்படியாக சொத்து வரி உயர்வு அமல்படுத்தி இருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். எனவே தமிழக அரசு சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதோடு, குடியிருப்புக்கு 25 சதவீதம், வணிகத்துக்கு 50 சதவீதம் என குறைக்கவேண்டும். குப்பை வரியை அறவே நீக்கவேண்டும்.  சொத்து வரியோடு கூடுதல் கட்டடத்துக்கு விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை ஒரு ஆண்டுக்கு பின் நீக்கிக் கொள்ளவேண்டும். 
கசிவுநீர் குட்டையை  தூர்வாரக் கோரிக்கை: 
இதுகுறித்து கொடுமுடி வட்டம், புஞ்சை கொளாநல்லி, கொளத்துப்பாளையம், தேவம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:  
தேவம்பாளையம் அருகே வெள்ளியம்பாளையத்தில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் குரங்கன்ஓடை குறுக்கே கசிவுநீர் குட்டை அமைந்துள்ளது. இக்குட்டை போதிய பராமரிப்பு இல்லாததால் முள்புதர்கள் வளர்ந்து, வண்டல் மண் படிந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் தேங்குவதில்லை.
எனவே முள்புதர்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.  அதிகாரிகள் பல மாதங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிமராமத்து பணியின் மூலம் குட்டையை தூர்வாரி ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
தனி நபர் கிணறு தோண்ட அனுமதிக்ககூடாது: 
இதுகுறித்து சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:   அய்யம்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம்.  பொதுமக்கள் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் வகையில்  ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே திறந்தவெளி கிணறு உள்ளது. இக்கிணற்றை தனிநபர் வாங்கி, ஏற்கெனவே 70 அடி ஆழமுள்ள கிணற்றை மேலும் ஆழப்படுத்தி, வணிகத் தொழில் பயன்பாட்டுக்காக பயன்படுத்த உள்ளார். 
இதனால் அருகில் உள்ள பொதுமக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, தண்ணீர் இல்லாமலும் போகலாம். எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் ஆழ்துளைக் கிணறு அருகில் எவ்வித புது ஆழ்துளைக் கிணறு அமைக்கவோ, கிணறுகளை அகலப்படுத்தவோ, ஆழப்படுத்தவோ தடை விதிக்கவேண்டும்.
அறக்கட்டளை நிர்வாகி மீது  நடவடிக்கையெடுக்க கோரிக்கை: 
பல கோடி ரூபாய் மோசடி செய்த அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் செயல்பட்டு வரும் ஒரு அறக்கட்டளையின் நிர்வாகி மற்றும் அவரது முகவர்கள் தமிழகம் முழுவதும் தங்களது அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகக் கூறி, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளனர். இந்த அறக்கட்டளை மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுதொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளையின் நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.  இந்நிலையில்,  மீண்டும் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், பல கவர்ச்சிகரமான விளம்பரங்களையும், தனது அறக்கட்டளை முதலீட்டாளர்களுக்கு நிதி வழங்கியது போலவும் விளம்பரம் செய்து வருகிறார்.
அந்த விளம்பரத்தில் ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் மோசடியைத் துவக்கி உள்ளனர்.  இதுவரை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அப்பாவி மக்களை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் அறக்கட்டளையை தடை செய்வதோடு, நிர்வாகிகள் மற்றும் முகவர்களை கைது செய்யவேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT