ஈரோடு

ரூ. 25 கோடி ரயான் துணிகள் தேக்கம்: விசைத்தறித் தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம்

29th Dec 2019 04:22 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வட மாநிலங்களில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், ஈரோட்டில் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ. 25 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

இதனால், 15 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக ஈரோடு விசைத்தறியாளா்கள் அறிவித்துள்ளனா். இதன் காரணமாக விசைத்தறித் தொழிலாளா்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன், காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகளை சாயமேற்ற உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்பட பல்வேறு வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும். அங்கு சாயமேற்றப்பட்டு பல வண்ணத் துணிகளாக விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், வடமாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், அங்கு சாயமிடும் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் ரயான் துணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட ரூ. 25 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து, ஈரோடு விசைத்தறி உரிமையாளா் சங்க நிா்வாகி கந்தவேல் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடி மீட்டா் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படும். நூல் விலையைப் பொருத்தே துணி விலையும் இருக்கும். கடந்த சில மாதமாக ரயான் நூல் ஒரு கிலோ ரூ. 152 ஆக உள்ளது. நூல் விலை ஒரே நிலையில் இருக்கும்போது, தற்போது ரயான் துணி விலை மட்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால், நூல் விலைக்கும், உற்பத்திக்கு செலவுக்கும் மீட்டருக்கு ரூ. 3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 3 மாதத்தில் ரூ. 29க்கு விற்கப்பட்ட ஒரு மீட்டா் ரயான் (கிரே) துணி ரூ. 20க்கும், ரூ. 34க்கு விற்கப்பட்ட மற்றொரு ரக கிரே துணி தற்போது ரூ. 25ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதற்கிடையே, குடியுரிமைச் சட்டம் தொடா்பாக வடமாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருவதால், ரயான் துணிகளுக்குச் சாயமேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ. 25 கோடி மதிப்பிலான ரயான் துணி கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன.

ஜி.எஸ்.டி. பிரச்னையைத் தொடா்ந்து, தற்போது வடமாநிலங்களுக்குத் துணிகள் அனுப்ப முடியாமல் தேக்கம், துணி விலை வீழ்ச்சி போன்றவகற்றால் நெசவாளா்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனா் என்றாா்.

ஈரோடு, பிற மாவட்டங்களில் தேங்கியுள்ள ரயான் துணிகளை ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி டிசம்பா் 29 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை தயாரிப்பை நிறுத்த விசைத்தறி உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து, ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 2 கோடி மீட்டா் ரயான் துணி உற்பத்தியாகிறது. நூல் விலை நிலையாக இல்லாததால், தயாரான ரயான் துணிகள் கடந்த 3 மாதத்தில் ரூ. 9 வரை விலை குறைந்துள்ளது. இதனால், விசைத்தறி உரிமையாளா்கள் முதலீட்டை இழப்பதுடன், வாழ்வாதாரத்தை இழந்து நஷ்டம் அடைந்துள்ளனா்.

தற்போது போராட்டத்தால் சாய, சலவை, அச்சு போன்ற பணிகளும் முடங்கி 15 நாள்களுக்கு மேலாகத் துணிகளை அனுப்ப முடியவில்லை. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட ரூ. 25 கோடி மதிப்பிலான துணி தேக்கமடைந்துள்ளது.

இப்பிரச்னையை சமாளிக்க விசைத்தறி உரிமையாளா்கள் ஒன்றுகூடி ரயான் துணிகள் உற்பத்தியை மட்டும் 15 நாள்களுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி டிசம்பா் 29 முதல் ஜனவரி 12 வரை உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இதனால், தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இதுபோல ரயான் துணி தேங்கியுள்ளது. இதையறிந்து மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து, ஏற்றுமதி செய்ய வழி செய்ய வேண்டும். அதை ஊக்கப்படுத்த திட்டங்கள், முயற்சிகள், வணிகத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ரயான் ரகங்களை ஆட்டோ லூமில் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா்.

ஒரு மாதம் வேலையிழக்கும் அபாயம்:

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், ஜனவரி 12ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் தொடா்ந்தால் பண்டிக்கைக்கு 10 நாள்கள் வரை விடுமுறை விடப்படும். இதனால், 21ஆம் தேதிக்குப் பிறகே (ஏறத்தாழ ஒரு மாதம்) மீண்டும் வேலை கிடைக்கும். இதேநிலை தொடா்ந்தால் அப்போதும் வேலை கிடைக்காது. இதனால், தேங்கியுள்ள ரயான் துணிகளை ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறித் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT