ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க 11 ஆவணங்களை மாற்று அடையாள ஆவணமாக வாக்காளா்கள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் செல்லும் வாக்காளா்கள் அனைவரும் பூத் சிலிப் உடன் தவறாமல் தங்களிடம் உள்ள வாக்காளா் அடையாள அட்டை அல்லது பின்வரும் 11 மாற்று அடையாள ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
அதன்படி, கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), ஓட்டுநா் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லிடப்பேசிகளுக்குத் தடை:
வாக்குப் பதிவுகள் நடைபெறும் பகுதிகளில் வாக்காளா்கள் செல்லிடப்பேசி கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச் சாவடி அலுவலா்களும் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடி தலைமை அலுவலா் மட்டும் வாக்குப் பதிவு விவரங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மாவட்டத் தோ்தல் அலுவலருக்கு அனுப்பிட மட்டும் செல்லிடப்பேசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.