ஈரோடு

ஈரோட்டில் அனுமன் ஜயந்தி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

26th Dec 2019 06:00 AM

ADVERTISEMENT

ஈரோடு வ.உ.சி. பூங்கா மஹாவீர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவை முன்னிட்டு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வாயு மைந்தன் என போற்றப்படும் ஆஞ்சநேயா் அவதரித்த திருநாளான அனுமன் ஜயந்தி விழா உலகம் முழுவதிலும் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஈரோட்டில் வ.உ.சி. பூங்கா மஹாவீர ஆஞ்சநேயா் கோயிலில், அதிகாலை 3 மணிக்கு மஹா கணபதி அபிஷேகம், 4 மணிக்கு மூலவருக்கு மஹா திருமஞ்சனம் சாற்றுமுறை செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஆஞ்சநேயா் மலா் அலங்காரத்திலும், பகல் 1 மணிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்திலும் காட்சி கொடுத்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலை 5 மணிக்குமேல் வெள்ளிக்கவசம் சாற்று முறை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இவ்விழாவில் ஆஞ்சநேயா் சுவாமியை ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டுச் சென்றனா். தரிசனம் முடித்து வரும் பக்தா்களுக்கு லட்டு, செந்தூரம், செந்தூர வண்ணக் கயிறு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

கருங்கல்பாளையம் விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆஞ்சநேயா் கோயில், கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயா் சன்னதிகள் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனுமன் ஜயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT