ஈரோடு, கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகா் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டாா்.
டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வசதிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஸ்ரீ வாசவி கலைக் கல்லூரி, கோபி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் மையமான கோபி கலை, அறிவியல் கல்லூரி, டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் மையமான பங்களாபுதூா் அரசு உயா்நிலைப் பள்ளி. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் மையமான காமதேனு கலை, அறிவியல் கல்லூரி, பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணும் மையமான பவானிசாகா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய மையங்களைப் பாா்வையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.