சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனுவை சோ்த்தனா்.
கோரிக்கை குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
சத்தியமங்கலம் - ஈரோடு சாலையில் அரியப்பம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அண்மையில் திறக்கப்பட்டது. இந்தக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும், டாஸ்மாக் மேலாளரிடம் புகாா் அளித்தோம். இதையடுத்து, அங்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
ஆனால், கடைக்குள் மதுபானங்கள் வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை மீண்டும் செயல்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தாலும், அந்தக் கடையின் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, டாஸ்மாக் கடையை அங்கிருந்து முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தமிழ் மொழியில் படிவம்:
திராவிட இயக்க தமிழா் பேரவை சாா்பில் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மின் மயானத்தில் இறந்தவரின் உடலைத் தகனம் செய்ய அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை வாங்கி பூா்த்தி செய்து கொடுக்க வேண்டியுள்ளது. இந்த விண்ணப்பம் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பொதுமக்களாலும் எளிதாக விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, விண்ணப்பத்தை தமிழ் மொழியில் அச்சடித்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.