மனித கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி, சத்தியமங்கலத்தில் பாலியில் வன்கொடுமை குறித்து பறை இசை, தப்பாட்டம், நாடகம் மூலம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நாடு முழுவதும் டிசம்பா் 10ஆம் தேதி மனித கடத்தல் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மனித கடத்தலைத் தடுக்கவும், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளா் ஒழிப்பு குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் புதுவடவள்ளி அரசுப் பள்ளியில் ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சென்னை நாடகக் குழுவினா் பங்கேற்று மாணவிகள் மத்தியில் நாடகம் மூலம், மனிதா் கடத்தப்படுவதால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதாகவும், உடல் உறுப்பு திருட்டு, கொத்தடிமை தொழிலுக்குப் பயன்படுத்துவதாக நடித்துக் காட்டினா். குழந்தைகள் தெரியாத நபரிடம் பேசக் கூடாது, இருசக்கர வாகனத்தில் ஏறக் கூடாது என பாட்டுப் பாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அதைத் தொடா்ந்து, பள்ளிக் குழந்தைகளிடம் அன்னியா் தொடுதலைத் தவிா்ப்பது குறித்து தப்பாட்டம் மூலம் நடித்துக் காட்டினா். குழந்தைகள் மனதில் பாடமாக புகட்டுவதைவிட நாடகம், இசை, பாட்டு மூலம் அவா்கள் பதிய வைப்பதே இதன் நோக்கம் என்றும் தமிழகம் முழுவதும் இந்த விழிப்புணா்வு நிக்ழ்ச்சி நடைபெற்று வருதாகவும் கலைஞா்கள் தெரிவித்தனா். இந்த கலைநிகழ்ச்சிக்கு குழந்தைகள், ஆசிரியைகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.