தாளவாடி மலைப் பகுதியில் தக்காளி வரத்து அதிகமானதன் காரணமாக அதன் விலை கிலோ ரூ. 5 ஆக சரிந்தது. கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளிச் செடியிலிருந்து பறிக்கப்பட்டு தாளவாடியில் உள்ள ஏல விற்பனை மையத்துக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். தற்போது கேரளத்தில் அதிக மழை பெய்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அங்கு சரிவர விற்பனையாவதில்லை. மேலும், தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் பகுதியில் தக்காளி வரத்து அதிகமானதால் அதிக விலைக்கு வியாபாரிகள் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக 28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்ற நிலையில், தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ. 150 க்கு மட்டுமே விற்பனையாயின. அதாவது கிலோ ரூ. 20 வரை விற்பனையான நிலையில் வியாழக்கிழமை கிலோ ரூ. 5 ஆக சரிந்துள்ளது. இதனால், தக்காளி பயிரிட்டுள்ள தாளவாடி மலைக் கிராம விவசாயிகள் செடியிலிருந்து தக்காளி பறிக்கும் கூலி வழங்குவதற்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
தக்காளி ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் உற்பத்தி செலவாகும் நிலையில் அதனைப் பறித்து விற்கும்போதும் ரூ. 50 ஆயிரம் மட்டுமே கிடைப்பதால் தக்காளி விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.