ஈரோடு

7 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி  பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் தர்னா

29th Aug 2019 07:05 AM

ADVERTISEMENT

மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் தர்னாவில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணுசாமி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சையத் இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பழனிசாமி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் குப்புசாமி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  
இதில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 7 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சீரழிக்க,  மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதைக் கைவிட வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும். ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 60 இல் இருந்து 58 ஆக குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. 
போராட்டத்தில், மாவட்டத்தில் பணியாற்றும் 480 ஒப்பந்தப் பணியாளர்களில் 150 பேர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். மேலும், ஓய்வூதியர்கள் சங்க மாநில உதவிச் செயலாளர் பரமேஸ்வரன், மாநில துணைச் செயலாளர் மணியன், மத்திய பொதுத் துறை ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி பரமசிவம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT