ஈரோடு

சாயக் கழிவுநீரை வெளியேற்றிய ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

29th Aug 2019 07:04 AM

ADVERTISEMENT

பவானி அருகே சாயக் கழிவுநீரை வெளியேற்றிய ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பவானியை அடுத்த காடையம்பட்டியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சாய ஆலையிலிருந்து கழிவுநீர் கருப்பு நிறத்தில் சாக்கடையில் வெளியேறிச் சென்றுள்ளது. 
இதைக் கண்ட அப்பகுதி மக்கள்அதிர்ச்சி அடைந்ததோடு,  கழிவுநீரை தண்ணீர் பாட்டில்களில் பிடித்து சேகரித்தனர். மேலும், கழிவுநீர் சாக்கடையிலிருந்து வெளியேறிச் செல்லாத வகையில் மண்ணைப் போட்டு தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, சாய ஆலையின் முன்பாகத் திரண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரன், போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 
பவானி வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தியதோடு, கழிவுநீர் வெளியேற்றப்பட்ட  பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் விஜயகுமார், அலுவலர்கள் சம்பவ இடத்தில் கழிவுநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆய்வு முடிவுகளுக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT