குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படவுள்ள அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஏ.எஸ்.முஜீப் பாஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை சார்பில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி நடத்தப்படவுள்ளது.
குழந்தைகள் உரிமை என்ற தலைப்பில் அஞ்சல் தலையை வடிவமைக்க வேண்டும். 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அஞ்சல் தலையை வடிவமைப்பதற்கான ஓவியம், அவரது சொந்த படைப்பாக இருக்க வேண்டும். இதற்கு முன் வேறு எந்த அச்சு, மின்னணு ஊடகத்திலும் பிரசுரிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
அஞ்சல் தலை வடிவமைப்பு மாதிரி, ஓவியம் வரைய, இன்க், வாட்டர் கலர், ஆயில் பெயின்ட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வரைய பயன்படுத்தப்படும் காகிதம் ஏ4 அளவில் மட்டும் இருக்க வேண்டும்.
ஓவியத்தின் பின்புறம் பெயர், ஆணா, பெண்ணா, வயது, வகுப்பு, விலாசம், செல்லிடப்பேசி எண், இமெயில் முகவரி ஆகியவற்றை எழுத வேண்டும். முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ. 25,000, மூன்றாம் பரிசு ரூ. 10,000, 5 பேருக்கு ஆறுதல் பரிசு தலா ரூ. 5,000 வழங்கப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள், இந்திய அஞ்சல் துறை இணையதளம் www.indiapost.gov.in இல் அறியலாம். படைப்புகளை செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் ADG (Philately), ROOM NO:108, DAKBHAVAN, PARLIAMENT STREET, NEW DELHI } 110001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.