ஈரோடு

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது

28th Aug 2019 10:26 AM

ADVERTISEMENT

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் அங்குள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்துபவர்கள், இழிவுபடுத்துபவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும், தேச துரோக வழக்கிலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 
இதன்படி கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில், மாவட்ட தலைவர் சின்னதம்பி, துணைத் தலைவர் சண்முகம், ஒன்றியத் தலைவர்கள் சென்னியப்பன், கந்தசாமி உள்பட கட்சியினர் ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் திரண்டனர்.
அங்கு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு சூரம்பட்டி போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இதேபோல, ஈரோடு, சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை செயலாளர் வீரகோபால் ஆகியோர் பேசினர். 
இதில், தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், மாவட்ட தலைவர் சுப்பிரமணி, கொள்கை பரப்புச் செயலாளர் வீரபாபு, ஒன்றியச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT