மாதாந்திர மின் நிறுத்தம் மூலம் நான்கு சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படுவதால் இதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் வி.சரவணன் தலைமையில் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளர் வி.டி.ஸ்ரீதர், பொருளாளர் ஆர்.ராம்பிரகாஷ், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஈரோடு அருகே சிப்காட் வளாகம் அருகில் அல்லது பெருந்துறை அருகில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும். வேளாண் உணவு உற்பத்தி ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். மாதாந்திர மின் நிறுத்தம் மூலம் நான்கு சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படுவதால், இதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வங்கி விடுமுறை தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. அதற்கேற்ப சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகளை இயக்க வேண்டும்.
வராக்கடன் கால நிர்ணயம் ஆறு மாதம் என்ற முறையை நிரந்தரமாக்க வேண்டும். ஈரோடு மாநகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள், நிலத்துக்குள் மின் கேபிள் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, தரமான சாலைகளை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை வளாகம் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக வீரப்பன்சத்திரம் வரை புதிய மேம்பாலம் கட்ட வேண்டும். ஈரோடு மாநகரை சுற்றி அமைக்கப்பட்டு வரும் சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து முடித்து, முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள பணியாளர் ஊர்திக்கு ஒவ்வொரு இருக்கைக்கும் ரூ. 500 என்பதைக் கைவிட்டு ஆண்டு வரியாக ஒருங்கிணைந்த முறையில் குறைவான தொகையை வசூலிக்க வேண்டும். சரக்கு, போக்குவரத்து வாகன காப்பீட்டு பிரிமியத் தொகையை குறைக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை, உணவுப் பூங்காவில் தொழில் நிறுவனங்கள் அமைவதில் ஏற்படும் தடைகள், இடையூறுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் பகுதியில் கூட்ஸ் ஷெட் அமைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியர் தலைமையில் தொழில் முனைவோர் குறைகளைத் தீர்க்க கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.