சத்தியமங்கலத்தில் ஆன்லைனில் இரட்டிப்புப் பணம் வழங்குவதாகக் கூறி ரூ. 15 கோடி வரை மோசடி செய்த 4 பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மனைவி மகாலட்சுமி. சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையைச் சேர்ந்த குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தினர் ஆன்லைனில் பணம் கட்டினால் 100 நாள்களில் இரட்டிப்புப் பணம் வழங்குவதாக கடந்த இருதினங்களுக்கு முன்பு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் வங்கிக் கணக்கில் ரூ. 1 லட்சம் கட்டினால் தினமும் வங்கிக் கணக்கில் ரூ. 2,500 வீதம் 100 நாள்களுக்கு இரண்டரை லட்சம் வரை பணம் வழங்குவதாகக் கூறியதால், மகாலட்சுமி ரூ. 17 லட்சம் வரை பணம் கட்டியதாகவும், சில நாள்கள் மட்டுமே வங்கிக் கணக்கில் பணம் வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக பணம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் (35), பங்குதாரர்கள் கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (30), பிரகாஷ் (30), கவுந்தப்பாடி - ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் (30) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், குவாலிட்டி டிரேடர்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் மருந்துப் பொருள் விற்பனையில் அதிக லாபம் கிடைப்பதாகவும், இதை முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு வழங்குவதாகவும், ஒரு லட்சம் கட்டினால் 100 நாள்களுக்கு தினமும் ரூ. 2,500 வீதம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வழங்குவதாகவும் ஆன்லைனில் விளம்பரம் செய்தது தெரியவந்தது.
மேலும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளை அலுவலகம் அமைத்து 1,300 பேரிடமிருந்து ரூ. 15 கோடி வரை வசூல் செய்துவிட்டு சிலருக்கு மட்டும் வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு, கடந்த 3 மாதங்களாகப் பணம் செலுத்தாமல் தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகியோர் தலைமறைவானதும் தெரியவந்தது.
இதையடுத்து, கவுந்தப்பாடி - ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன், தங்கராஜின் தந்தை துரைசாமி, காசோலை வழங்கிய சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 3 பேரை கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். தலைமறைவான 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.