சத்தியமங்கலத்தில் பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து மிதிவண்டி திருடிச் சென்ற காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
சத்தியமங்கலம், கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர், சத்தியமங்கலத்தில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். சத்தியமங்கலத்திலிருந்து கரட்டூர் செல்லும் சாலையில் இவரது வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் மேல் மாடியில் வெள்ளிங்கிரி (40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் முன் பகுதியில் கார், மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில், ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வெள்ளிங்கிரிக்கு சொந்தமான மிதிவண்டி காணாமல் போனது. இதையடுத்து, வீட்டின் முன்புள்ள சிசிடிவி கேமராவை யுவராஜ் ஆய்வு செய்தார். இதில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் முன்புற கேட்டை திறந்து உள்ளே வந்து மிதிவண்டியை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, யுவராஜ் சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.