ஈரோடு, திருநகர் காலனி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளர் சண்முகவேல், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அன்புதம்பி, மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் ராமசந்திரன் உள்பட பல அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு, திருநகர் காலனி பிரதான சாலையில், கிரசன்ட் மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இக்கடையை சுற்றிலும் வீடுகளும், எதிரே பொதுக் கழிப்பறையும் உள்ளது. இப்பகுதியில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அமர்ந்து குடிக்கும் இடமாகவும், வாகனங்களை சாலையிலும், வீடு, கடைகளின் முன்பு நிறுத்தி பெரும் தகராறு செய்கின்றனர். குறிப்பாக, மாலை 6 முதல் இரவு 12 மணி வரை இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால், இக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலுமினிய ஆலையால் சுகாதார சீர்கேடு: ஈரோடு மாரப்பா 1, 2 ஆம் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: மாரப்பா வீதியில் பவுடர் கோட்டிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு அலுமினிய பைப்களுக்கு ரசாயன கலவையைப் பயன்படுத்தி கோட்டிங் செய்யும் பணி நடைபெறுகிறது. இரும்பு பைப்களுக்கும் கோட்டிங் கொடுக்கின்றனர்.
இந்நிறுவனத்தைச் சுற்றிலும் அத்தெருக்களில் 120 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தவிர மருத்துவமனை, திரையரங்கு, சிறு வணிக நிறுவனங்கள் என பலவும் உள்ளன. இந்நிறுவனத்தில் இருந்து அலுமினிய பவுடர், ரசாயன கழிவு, பவுடர்கள், துர்நாற்றம், பல வண்ணங்களில் கழிவுநீர் வெளியேற்றம் என பல பிரச்னைகள் உள்ளன.
இவற்றால் காற்று, நீர் ஆகியவை மாசுபடுகிறது. பொதுமக்களால் சுவாசிக்க முடியவில்லை. அப்பகுதியில் உள்ள கட்டடங்களின் தரைகளில் ஏராளமான அலுமினிய துகள்கள், தூசிகள் படிந்து, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஆலைகளை, குடியிருப்புப் பகுதியில் அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகையில் போலி ஸ்டிக்கர்: ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்ட்டிஸ்ட் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் கே.ஆனந்தன் தலைமையில், நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:
கடந்த சில ஆண்டுக்கு முன்பு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை (எச்.எஸ்.ஆர்.பி.) என பார்கோடு உடன் அறிமுகம் செய்து, அதில் தவறு இருப்பதாகக் கூறி அதனை பயன்படுத்தக் கூடாது என்றனர். தற்போது அதேபோன்ற பதிவு எண் பலகைகளை அந்தந்த வாகன விற்பனை நிறுவனங்களே தயாரித்து வழங்குவதாகக் கூறி உள்ளனர். அவர்கள் வழங்காமல் குறிப்பிட்ட நபரை நியமித்து, அதில் பார் கோடு, சென்சார் என எந்த நவீன தொழில்நுட்ப வசதியும் இன்றி போலியான, தரம் குறைந்த பதிவு எண் பலகைகளை வழங்குகின்றனர்.
இதற்காக எந்த அரசாணையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட நபரிடம்தான் பதிவு எண் பலகைகளைப் பெற வேண்டும் என எந்த அறிவிப்பும் செய்யாமல், பெட்ரோல் மூலம் அழிக்கும் தன்மை உடைய பலகைகளை வழங்குகின்றனர். இதுகுறித்து தெளிவுபடுத்தி போலிகளைத் தவிர்க்க வேண்டும். ஸ்டிக்கர் ஆர்ட்டிஸ்ட் தொழிலை நம்பி 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளோம். எங்களது தொழிலை அழிக்கும் வகையில் உள்ள இதனை அனுமதிக்கக் கூடாது.
தசை சிதைவு நோயாளிகளுக்கு
இலவச மருத்துவம் வழங்கக் கோரிக்கை: இதுகுறித்து, ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த எம்.ராஜா (29) அளித்த மனு: எனது தந்தை ஓட்டுநராகப் பணி செய்கிறார். தற்போது அவருக்கு ஒரு கை செயல்பாடு குறைந்து உள்ளூருக்குள் மட்டும் ஓட்டுநராக கிடைக்கும் பணியை செய்கிறார். எனது அக்கா எம்.வனிதா (31), ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்துள்ளார். அதன்பின் அவருக்கும் தசை சிதைவு நோய் வந்து அவரும் 15 ஆண்டுகளாக வீட்டில் உள்ளார். அவருக்கு திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக எனக்கும் அதே குறைபாடு உள்ளது. நான் சிகிச்சைக்கு செல்லும் இடங்கள் மூலம் இந்நோய் பாதித்த பல ஆயிரம் பேரை கண்டுள்ளேன். அவர்கள் அனைவரும் இளம் வயதில் ஆரோக்கியமாக வாழ்ந்து திடீரென பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முறையான சிகிச்சை, மருந்து, தொடர் சிகிச்சைக்கு வழி இல்லை. ஒவ்வொரு டி.என்.ஏ. பரிசோதனைக்கும் ரூ. 15,000 முதல் ரூ. 60,000 வரை செலவாகிறது. இந்நோய்க்கு உரிய மருந்து இல்லாததால் உடலில் சத்து அதிகரிப்பதற்கான மருந்துகளையே வழங்குகின்றனர். வெளிநாடுகளில் இதற்கான மருந்து கிடைக்கிறது. அவற்றை வாங்கி அரசு இலவசமாக வழங்கி எங்களது சிகிச்சை, பரிசோதனைக்கு உதவ வேண்டும்.
இதனை முறையாகப் பதிவு செய்தால் மாதம் ரூ. 1,500 அரசு மூலம் வழங்கப்படுகிறது. வேறு எந்த உதவியும் இல்லை. எங்களுக்கு தகுந்த பணிகளில் முன்னுரிமையை அரசு வழங்க வேண்டும். இந்நோய் வராமல் தடுக்கவும், வந்தவர்களுக்கான கிசிச்சை, உதவிகள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
37 பேருக்கு நலத்திட்ட
உதவி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 262 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், பல்வேறு சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ. 15,000 க்கான காசோலை, மாவட்ட ஆட்சியரின் விருப்பக் கொடை நிதியிலிருந்து 30 பயனாளிகளுக்கு தலா ரூ. 5,565 வீதம் ரூ. 1,66,950 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்கள், தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் மாதம் தலா ரூ. 1,000 வீதம் 6 நபர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகைக்கான ஆணைகள் என மொத்தம் 37 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ம.தினேஷ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அலுவலர் வை.இளங்கோ உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.