ஈரோடு

கோயில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

27th Aug 2019 09:03 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஸ்ரீ எல்லை மாகாளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நஞ்சை ஊத்துக்குளி கிராமம், கோவிந்தநாயக்கன்பாளையம் ஊர் எல்லையில் உள்ளது ஸ்ரீ எல்லை மாகாளியம்மன் கோயில். கோயில் பூசாரி பூஜைகள் முடித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் கோயிலைப் பூட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், அவ்வழியாக திங்கள்கிழமை அதிகாலை சென்றவர்கள் கோயிலைப் பார்த்தபோது முன்புற கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து ஊர்ப் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் ஒரு கி.மீ. தூரம் எடுத்துச் செல்லப்பட்டு, ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்து சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இக்கோயிலில் இதேபோல் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 5 முறை உண்டியல் திருட்டு நடைபெற்றுள்ளது. இதில், இரண்டு முறை உண்டியல் திருடர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT