ஈரோடு

பவானி நகரப் பகுதியில் நிலுவைப் பட்டா பிரச்னை: நகராட்சி அலுவலகத்தில் நாளை முகாம்

23rd Aug 2019 09:27 AM

ADVERTISEMENT

பவானி நகரப் பகுதியில் நிலுவைப் பட்டா பிரச்னை தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பவானி நகரத்தில் உள்ள 17 வார்டுகளில் நகர நில வரித் திட்டத்துக்குப் பின் நகர வருவாய் பின்தொடர் பணியில் வெளியிடப்பட்ட தூய அடங்கல் எச்.ஓ. என்ற பதிவு நில உடைமைதாரர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் நிலுவை என அடங்கல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அவ்வாறு நிறுத்தப்பட்ட இனங்களில், நீதிமன்ற வழக்குகளுக்கு உட்படாததை உறுதி செய்து ஈரோடு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர், புலத் தணிக்கை செய்து அ பதிவேடு பதிவுகள், நகர அளவை பதிவுகள் பரிசீலிப்பதுடன், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றனர். அங்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள், வாக்குமூலம் அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விதிக்கு உட்பட்டு பவானி நகராட்சி அலுவலகத்தில் 17 வார்டுகளில் ஏ, பி, சி க்கு உட்பட்ட நிறுத்தம் என பதிவு செய்யப்பட்டுள்ள 1,526 புல எண்களுக்கு பட்டா வழங்கும் வகையில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 9 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பொதுமக்களிடம் விண்ணப்பங்களைப் பெறுகிறார்.
இப்பிரச்னை தொடர்பாக விண்ணப்பம் வழங்குவோர், கிரய பத்திர நகல், மூலப்பத்திர நகல், சொத்து வரி, வீட்டு வரி ரசீது நகல், மின் கட்டண அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வில்லங்கச் சான்று (1987 முதல் இது வரையிலானது), பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, இறப்புச் சான்று, வாரிசு சான்று நகல் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT